Skip to main content

பகவத் கீதை உண்மையுருவில் 8.21

தேவநகரி

अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम् ।
यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ ८.२१ ॥

உரை

அவ்யக்தோ (அ)க்ஷர இத்-யுக்தஸ்
தம் ஆஹு: பரமாம் கதிம்
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே
தத் தாம பரமம் மம

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்

அவ்யக்த:—தோற்றமற்ற; அக்ஷர—அழிவற்ற; இதி—இவ்வாறாக; உக்த:— கூறப்படும்; தம்—அந்த; ஆஹு—அறியப்பட்ட; பரமாம்—பரம; கதிம்—கதி; யம்— எதை; ப்ராப்ய—அடைந்தபின்; ந—என்றும் இல்லை; நிவர்த்தந்தே—திரும்பி வருவது; தத்—அந்த; தாம—இருப்பிடம்; பரமம்—பரம; மம—எனது.

மொழிபெயர்ப்பு

எதனை தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது பரம கதியாக அறியப்படுகின்றதோ, எந்த இடத்தை அடைந்தவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அதுவே எனது உன்னத இருப்பிடம்.

பொருளுரை

முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத இருப்பிடம், எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யக்கூடிய இடமாக (சிந்தாமணி தாம) பிரம்ம சம்ஹிதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. கோலாக விருந்தாவனம் என்று அறியபப்படும் கிருஷ்ணரின் இந்த பரம இருப்பிடம், சிந்தாமணிக் கற்களால் செய்யப்பட்ட மாளிகைகளை உடையது. விரும்பும் உணவினை வழங்கும் கற்பக மரங்களும், அளவின்றி பால் சுரக்கும் சுரபி பசுக்களும் அங்கு உள்ளன. அந்த உன்னத இருப்பிடத்தில் பல்லாயிரக்கணக்கான இலட்சுமிகளினால் பகவான் சேவை செய்யப்படுகிறார். கோவிந்தன் என்று அழைக்கப்படும் ஆதி புருஷரான அவரே எல்லா காரணங்களுக்கும் காரணமாவார். பகவான் புல்லாங்குழலை ஊதும் பழக்கமுடையவர் (வேணும் க்வணந்தம்) அவரது திவ்யமான ரூபம் அனைத்து உலகையும் கவரக் கூடியதாகும்—அவரது கண்கள் தாமரை இதழ்களைப் போன்றவை, அவரது மேனி நிறம், மேகத்தின் நிறத்தைப் போன்றது. அவரது உடலழகு கோடிக்கணக்கான மன்மதர்களை மிஞ்சுவதாக அமைகிறது. அவர் மஞ்சள் நிற உடையுடுத்தி, கழத்தில் மாலை அணிந்து, தலையில் மயில் தோகையை அணிந்துள்ளார். ஆன்மீக உலகில் தலைசிறந்த உலகமும், தனது சொந்த இருப்பிடமுமான, கோலாக விருந்தாவனத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை மட்டுமே பகவான் கீதையில் கொடுத்துள்ளார். விரிவான விளக்கங்கள் பிரம்ம சம்ஹிதையில் கொடுக்கப்பட்டுள்ளன. வேத இலக்கியங்கள் (கட உபநிஷத் 1.3.11). முழுமுதற் கடவுளின் இருப்பிடத்தைவிட உயர்ந்தது வேறு ஏதும் இல்லை என்றும், அதுவே பரம கதி என்றும் கூறுகின்றன (புருஷான் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா பரமா கதி:). அதனை அடைந்தவன், ஒருபோதும் ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை. கிருஷ்ணரும் அவரது உன்னத இருப்பிடமும் வேறுபட்டவை அல்ல; ஏனெனில், அவை ஒரே குணத்தை உடையவை. ஆன்மீக வானிலுள்ள இந்த உன்னதமான கோலாக விருந்தாவனத்தில் மாதிரி ஒன்று, பூவுலகில், டில்லிக்குத் தொண்ணூறு மைல் தென்கிழக்கே அமைந்துள்ளது. கிருஷ்ணர் இவ்வுலகில் அவதரித்தபோது, இந்தியாவிலுள்ள மதுரா மாவட்டத்தின், 84 சதுர மைல் நிலப்பரப்பினைக் கொண்ட விருந்தாவனம் எனும் இந்த இடத்தில்தான் தனது லீலைகளைச் செய்தார்.